இன்று காலை நாளிதழைப்
புரட்டிக் கொண்டிருந்தேன். கண்ணில்பட்ட செய்தி அதிர வைத்தது. சில நொடிகள் அந்தச் செய்தியிலேயே
நிலைகுத்தி நின்றன கண்கள்.
தன்னுடைய 6 வயது குழந்தையோடு பெண் பொறியாளர்
புழல் ஏரியில் தற்கொலை செய்துகொண்ட செய்திதான் அது.
கல்வி நமக்கு எதைக்
கொடுத்தது? எதைக் கொடுக்கவேண்டும்? எது வாழ்க்கைக்கு முதன்மையானது?
பெண் குழந்தைகள்
படித்துவிட்டால், வாழ்க்கைப் பிரச்சனைகளை எதிர்கொள்ளுகின்ற துணிவினைப் பெற்றுவிடுவார்கள் என்று நினைத்தார்கள், சென்ற தலைமுறை அம்மாக்கள். அதற்காகப் பெண் குழந்தைகளைப் படிக்க
வைப்பதில் முனைப்பும் காட்டினார்கள். ஆனால், படிப்பிருந்தும், வேலையிருந்தும், தான்
பாதுகாத்து வளர்க்கவேண்டிய ஒரு மகன் இருந்தும் அந்தப் பெண், தற்கொலை செய்துகொள்ள நினைத்தது ஏன்?
பத்து வயதில் கணவரை
இழந்து அவர் முகமே தெரியாதவேளையில் வெள்ளைப் புடவையைக் கட்டி தன் எண்பத்தைந்து வயது
வரையில் வண்ணப் புடவையைக் கட்டியறியாத ஒட்டப்பிடாரத்து அத்தையைச் சிறுவயதில் பார்த்திருக்கின்றேன்.
இட்லி வியாபாரத்திலே இனிமையாக காலம் கழித்தவர் அவர்! வெள்ளைப்புடவையில் பார்த்த அவர்களின்
உருவம் இன்றுவரை என் கண்களைவிட்டு மறையவே இல்லை.அந்த வைர மங்கையை நினைத்து இன்றும்
உள்ளம் பூரிக்கின்றேன்.
கணவரைப் பிரிந்தபோது
எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்தவர்; அதன்பிறகு, தன் இரு குழந்தைகளையும் வளர்த்துக்கொண்டு பி.எச்.டி., பட்டமும் பெற்றார்; கல்லூரி முதல்வருமானார், என்னுடைய அன்புக்குரிய பேராசிரியர். ஏன், நானும் இப்படியான
கடினமான சூழ்நிலைகளைக் கடந்துதான் வந்திருக்கின்றேன். இது இன்று நேற்றல்ல. எல்லாக்
காலத்திலும் நடந்ததுதான். நடப்பதுதான். பள்ளிக்கே செல்லாத ஆயிரமாயிரம் சகோதரிகள் சவாலான பிரச்சனைகளைச் சாதாராணமாகக் கடந்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கிருந்த ஆன்மபலம், படித்த நமக்கு எங்கே
போனது? பிரச்சனைகளைச் சந்திக்கத் தயங்குகின்ற - ஆன்ம பலத்தை அளிக்காத கல்வியால் என்ன பயன்?
நெஞ்சம் கனத்தது.
கிடைத்திருக்கும்
அழகான வாழ்க்கைக்காக, ஆயிரமாயிரம் போராட்டங்களைச் சந்திக்கலாம். சந்திப்போம். உள்ளம்
உடைமை, உடைமை ! உள்ளத்தில் உறுதியும் எண்ணத்தில் தெளிவும் இயைந்து வாழ்வோம்!